You are here

அமைதிப் பரிசு வென்றவர்

 
இவ்வாண்டின்(2019) அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது(Abiy Ahmed) ஆவார். எத்தியோப்பியாவிற்கும் எரித்திரியாவிற்கும் இடையிலான அமைதி முயற்சிகளுக்காக அவர் இந்த விருதைப் பெறுகிறார். அமைதிப் பரிசு உலகின் மிகவும் மரியாதைக்குரிய விருது, அந்தப் பரிசில் ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒரு பெரிய தொகையுடனான காசோலை ஆகியவை அடங்கும்.

 

நோபல் அமைதிப் பரிசு விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 10 ஆம் திகதி ஒஸ்லோ மாநகர சபை மண்டபத்தில் நடைபெறும். நோர்வே நேரப்படி மதியம் ஒரு மணியளவில் பரிசளிப்பு விழாவின் சிறப்பம்சங்கள் நடைபெறும், அதன்பின் அமைதிப் பரிசு வென்றவர்கள் தங்கள் விருதிற்கான சொற்பொழிவை வழங்குவார்கள். மண்டபத்தில் விழாவிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், இதில் நோர்வெயின் அரச கும்பத்தினர், மற்றும் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்களும் கலந்து கொள்வார்கள்.

 

விருது கொடுக்கப்படும் நாள் மாலை, ஒஸ்லோ நகரத்தின் தொடர்ரூந்து நிலையத்துக்கு முன்பாக அமைதிப் பரிசுக்கான தீப்பந்த ஊர்வலம் ஆரம்பிக்கிறது. அவ் ஊர்வலம் விருது வென்றவர்களின் நினைவாக நோர்வே பாராளுமன்றத்துக்கு அருகாமையிலுள்ள கிராண்ட் விடுதி(Grand Hotel) முன்பாக முடிகின்றது. விடுதியின் மாடிக்கு வெளியே அமைதிப் பரிசு வென்றவர் வந்து அங்கு தீப்பந்தத்தோடு ஊர்வலமாக வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து நன்றி தெரிவிப்பர்.

நோபல் பரிசுகள் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதிப் பரிசு ஆகிய ஐந்து துறைகளில் வழங்கப்படுகின்றன. சுவீடன் நாட்டைச் சேர்ந்த அல்ஃபிரட் நோபல்(Alfred Nobel) என்பவர் 1895 ஆம் ஆண்டு தனது செல்வத்தின் பெரும்பகுதியை மனிதகுலத்திற்கு நன்மை செய்தவர்களுக்காக தானம் செய்தார். அமைதிக்கான பரிசை நோர்வேயில் சேர்க்க வேண்டுமென்று அன்று ஆல்ஃபிரட் நோபல் என்பவர் முடிவு செய்தார், அதன்படி முதல் அமைதிக்கான நோபல் பரிசு 1901 இல் வழங்கப்பட்டது.