Home

You are here

அனைவரும் சேர்ந்து உழைத்திடுவோம்!

இடர்காலத்திலும் எம் தாய்மொழிக்கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு அனைவரும் சேர்ந்து உழைத்திடுவோம்!
 
மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டில்(2020-2021) புதிய உத்வேகத்துடனும், நம்பிக்கையோடும் புதிய பட்டறிவுகளோடும்; ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவச்செல்வங்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் சந்திப்பதில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் பெருமகிழ்வு அடைவதோடு, அனைவரையும்; அன்புடன் வரவேற்றுக்கொள்கின்றது. கடந்த கால கற்பித்தல் பட்டறிவுகளோடும்; புதிய பல கற்பித்தல் நுட்பங்களோடும், புதிய கல்வியாண்டில் தமது கற்பித்தல் பணியைச் சிறப்புடன் ஆற்ற  அன்னையின் ஆசிரியர்கள் அணியமாகிவிட்டார்கள்.
 
காலச்சூழல் காரணமாக எமது செயற்பாடுகளை வழமைபோல் நம் பாடசாலையில் தொடரமுடியாத இக்கட்டான சூழ்நிலை சென்ற கல்வியாண்டில் எங்களுக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது அன்னை தலைமை நிருவாகம் மேற்கொண்ட முயற்சிக்குப் பக்கபலமாக இருந்து, இணையமுற்றத்தில் கற்பித்தல் பணியில் ஆசிரியர்களும், நிர்வாகிகளும் மிகுந்த கரிசனையோடு  சிறப்பாக செயல்பட்டிருந்தமை நம் எல்லோருக்கும் மன நெகிழ்வையும், மகிழ்வையும் தந்திருந்தது. அச்சூழ்நிலையில், நம் மாணவச்செல்வங்களும் தாய்மொழியை ஓரளவேனும் தடையின்றிக் கற்றுக்கொள்ள, இவ் இணையமுற்றக் கல்வி பேருதவியாகவும் இருந்தது.
 
«எலிவளை என்றாலும் தனிவளை வேண்டும்»; என்பர் நம் முன்னோர். இதற்கமைய இவ் இடர்காலத்திலும் எம் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு எமக்கான ஒரு தாய்வீடு, நோர்வேயில் இருப்பதை எண்ணி நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். இதற்காக உழைக்கும் நல் நெஞ்சங்களான நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் அனைவரினதும் சேவை, வரலாற்றில் என்றும் மறக்கமுடியாதவை என்றே கூறவேண்டும்.
 
இவ் இடர்காலம் எமக்குப் பல சவால்களைத் தந்து கொண்டிருக்கிறது. இணையமுற்றத்தில் மட்டுமே சில வளாகங்கள் தமது செயற்பாடுகளைக் நடாத்தக் கூடியதாக இருக்கின்றது, அத்துடன் ஒசுலோவை அண்மித்த வளாகங்கள் நம் தாய்வீட்டை நோக்கி தமது செயற்பாடுகளை நகர்த்தவேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அறிவுப்பசியைப் போக்கும் அன்னையாக வளாகங்கள் செயற்பட்டதோடு மாத்திரமல்லாமல், பல பெரியவர்களும் பாடசாலையில் ஒருவரை ஒருவர் சந்தித்து ஏனையவர்களுடன் உரையாடி தம் மன அழுத்தங்களைப் போக்கிடும் ஒரு சிறந்த இடமாகவும் எமது நிறுவனம் செயற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனா நோய் காரணமாக ஏற்பட்ட இவ் இடர்காலத்தில், எமது செயற்பாடுகளை மட்டுப்படுத்த வேண்டிய கட்டாயாயத்தில் நாம் உள்ளோம்.
 
எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னைத் தமிழ்முற்றப் போட்டி நிகழ்வுகள், மாணவர்களை உற்சாகப்படுத்தும் நிகழ்வாக மாற்றியமைத்து நடத்தியிருந்தோம். இவ் ஏற்பாடானது பிள்ளைகளுக்கும் தங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது என பெற்றோர்கள் பேருவகையுடன் கூறியிருந்தனர். இக்கல்வியாண்டில் மேலும் பல அன்னை முற்றப்போட்டிகளை நடாத்த திட்டமிட்டுள்ளோம்,
தோற்றுநோய் பரவல் தொடர்ந்தும் இருப்பதால் அரசு சட்ட விதிகளுக்கமைய எமது கலைக்கூடத்தின் பணியை  அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்புபுடன் செயற்படுத்துவோம்.
 
தமிழ் எங்கள் அடையாளம்!
அன்னை தலைமை நிருவாகம், 11.08.2020
 

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo